Sangam Literature Classes
Sangak Koodam is a learning centre for Sangam Literature. Classes have started on 10 th January 2021.
Everyone in Thamizhnadu knows the term Sangam Literature. But is there enough awareness of what it really contains? We know a few of the famous phrases and quote them at will, but do we know what an incomparable wealth and legacy the literature really is.
The literature comprises 2 sets of works – 8 anthologies of short poems and 10 works of long poems on a single central character or theme. The works are broadly classified as Aham poems comprising poems on all internal aspect of life, like all the emotions of love, and Puram poems comprising poems on external factors that occupy our lives.
The Southern Pandiya Kings were so dedicated to creating literature that they gathered an assemblage of poets around them and researched Thamizh language and created literature. There were supposed to be 3 such assemblages which were later called Sangam. We lost the works of the first 2 Sangams to geological events which submerged the lands and the literature together under the sea. The works of the third Sangam, which was revived after the last cataclysm, are now collectively known as Sangam Literature. That they were written 2500 years ago is only the least of the glories. Besides acknowledged poets of eminence, they were poems written by kings, ministers, scholars and people of all walks of life, both men and women, including merchants, farmers, accountants, soldiers, potters etc. They contain poems of 42 women, a phenomenon seen nowhere in world literature in any civilization until modern times.
The Aham poems are peculiar to Thamizh, of all the literature of that era. Human inner emotions were never recorded by writers of that time anywhere else in the world and they comprise the bulk of Sangam literature. Poets were fascinated with the interplay of love in one’s life and considered it most worthy of painting them in words. The typical aspects of love in each Thinai land (Kurinji, Mullai, Marutham, Neithal and Palai – an unparalleled way of classifying land and its people) were grammarized and characterized for literature, an astounding feature of Thamizh. The rhetoric of the poems and some of the imagery are, to say the least, breathtakingly beautiful. They paint the beauty of each Thinai land and its people in colourful but delicate words reflecting the typical terrain and mood of the lands. They are master strokes from the pens of master craftsmen of words. Besides the many hues of love in one’s life, the Aham poems also record a lot of history.
The Puram poems are records of history, stages of war, as well as the unique Thamizh thought and philosophy. Like love in Aham, war was an important theme in Puram poems. But besides war, they contain poems on every aspect of life and living in a world that is not a bed of roses. Together, the Aham and the Puram verses comprehensively reflect Home and the World. Their universality is true even after 2500 years later.
In a shocking turn of events, we almost lost all of them to deliberate and ignorant destruction. Luckily, some of it was rescued from the throes of death and loss forever by a few scholars who went in search of the palm manuscripts in dire straits, literally losing sleep and food over them, retrieved them, corrected errors, edited, published and brought them to public view. But for them we would have lost the treasure forever without even knowing we possessed such a legacy. At least as a tribute to their unbelievably immense work, we need to learn the literature that they saved for us.
We are slowly realising the need to preserve them, first by learning what they are or what they have. In an attempt to spearhead learning one’s own literature and language systematically, Heritage Inspired has introduced a course on Sangam Literature involving eminent scholars who readily agreed to be part of the programme. A connect with its literature is the hallmark of the pre-eminence of a language or a people.
We shall let the world know what we have.
The Indian coastal lands lost to sea over millennia.
தமிழும் சங்கமும்
தமிழ் – எத்தனை அழகான சொல். ரோஜாவை எந்தப்பெயரால் அழைத்தாலும் அது ரோஜாதான் என்று சொன்னார் ஷேக்ஸ்பியர். ஆனால் தமிழை அதைத்தவிர வேறொரு சொல்லால் அழைக்கத்தான் முடியுமா? இதன் பழமையும் தொன்மையும் வரையறுக்கப்படவில்லை. இந்தியாவின் தென்முனையில், கடலுக்குள் தொலைந்துவிட்ட பரப்பில் (மேலே இருக்கும் படத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலுக்குள் தெரியும் இளநீலப் பகுதி) தோன்றிய மொழி இம்மொழி. தமிழ் மற்றெந்த மொழியின் கலப்பும் இல்லாமல் மொழித்தூய்மையுடன் தனித்தியங்கக்கூடிய மொழி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் தோன்றி பேச்சு, எழுத்து, இலக்கிய வழக்குகளில் இன்றுவரை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லையென்றே தோன்றுகிறது. ஒரு இனம் தோன்றி அந்த இனத்துடனே ஒரு மொழி தோன்றி, இனமும் மொழியும் ஒன்றுக்கொன்றின் அடையாளமாய் விளங்குவது இதுபோல் வேரெங்கும் காண முடியாது. தமிழினத்தின் சிந்தனையிலும் உணர்விலும் ஆழமாய் பதிந்துள்ள முழுமுதல் மொழி. இம்மொழி, வரி வடிவம் தாண்டி, எழுத்தாகிப் பின் இலக்கிய உருக்கொள்ளுமுன்பே ஒரு தனிச் சிந்தனையை உருவாக்கிக்கொண்டது. இதனாலேயே உலகில் வேறு எந்த மொழியிலும் சொல்லப்படாத சிந்தனையைத் தன் இலக்கியங்களில் பொதிந்து வைத்திருக்கும் ஒரு மொழியானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழை “ஆராய்ந்த” சங்கங்களை வைத்திருந்தவர்கள் நம் தென்பாண்டித் தமிழர்கள். இதனால்தான் இருமுறை தமிழ் படைத்த இலக்கியங்களையெல்லாம் கடல் கவர்ந்துகொண்ட பின்பும் மூன்றாம் சங்கமமைத்து இலக்கிய மரபைத் தொடரச் சளைக்கவில்லை.
தமிழின் மிகப்பழமையான நூலாய் நம் கையில் எஞ்சியிருப்பது சுமார் 3000 ஆண்டுகள் பழமையான தொல்காப்பியம் எனும் இலக்கண நூல். என்றால், தமிழில் இலக்கியம் அதற்கு முன்பே படைக்கப்பட்டிருந்தது என்பதுதானே உண்மை. தமிழின் சிந்தனை மரபு மிக மிக உயரியது, மிக அடிப்படையானது – மிகத் தொன்மையானது. அது சுயமானதாகவும், அறிவியல் தன்மையையும் கொண்டும் இருந்தது. இன்றைய அறிவியல், அண்டத்தின் அடிப்படையாயகக் கருதும் வெளி-காலம் (space-time) என்பவையே தமிழ் சிந்தனையின் முதன்மைக் கருத்தியல் என்பதை மிக எளிமையாக, மிகத்தெளிவாக தொல்காப்பியம் வெளிப்படுத்துகிறது:
முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே
– தொல்காப்பியம் அகத்திணை இயல்
மொழியியல் அறிஞர் கமில் ஸ்வலபில் (Kamil Zvelebil) “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும் என்பதைக்காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று தொல்காப்பியம்” (“one of the finest monuments of human intelligence”) எனக்கூறியுள்ளார். தொல்காப்பியம் எனும் இவ்விலக்கண நூல் எழுத்து, சொல் இவை தவிர தன் பொருளிலக்கணத்தில் வாழ்விலக்கணத்தையும் எடுத்துரைக்கின்றது.
அன்றைய உலகத்தின் ஏனைய பண்பாடுகளின் சிந்தனை மரபுகளெல்லாம் இறைவன், சமயம் மற்றும் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, தமிழ்ச் சிந்தனை இயற்கையியலை அடிப்படையாகக் கொண்டதாகத் தன்னை உருவாக்கிக்கொண்டது. உலகின் தோற்றம், வாழ்க்கையின் போக்கு, அதன் தேவை போன்றவை இயற்கையின் இயல்பான போக்கிலிருந்து உருவானவை என்று தமிழ்ச்சிந்தனை கருதியது. உலகம் இயற்கையின் ஐந்து நிலைகளின் இயல்பான சேர்க்கையினால் தோன்றியதாகக் கருதினார்கள்.
‘நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கம் உலகம்’
– தொல்காப்பியம் பொருள் 635.
இதே செய்தியை புறநானூறு தெளிவாக்குகிறது:
‘மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத் தியற்கை.’
– புறம் 2
இந்த உயரிய சிந்தனை மரபின் தொடர்ச்சியாக, வெளிப்பாடாகத் தோன்றியவையே மொழி ஆய்வுக்கான தமிழ்ச் சங்கங்களும் அச்சங்கங்களில் அரங்கேற்றப்பட்ட, தொகுக்கப்பட்ட இலக்கியங்களும். பாண்டிய மன்னர்கள் இச்சங்கங்களின் பாதுகாவலராக இருந்தனர். தமிழ் மன்னர்களில் சிலர் இலக்கியம் படைப்பவராகவும் இருந்தனர். இயல் தமிழுடன் கூடி இசைத்தமிழும் நாடகத்தமிழும் மூன்று தனித் தமிழ்களாக அறியப்பட்டு, மூன்று தமிழிலும் நூல்கள் இயற்றப்பட்டதாக அறிகிறோம். முதலாம், இரண்டாம் சங்க இலக்கியங்கள் கடல் கோள்களில் அழிந்ததாகக் கருதப்படுகின்றன. தொல்காப்பியம் கடல் கோளுக்குத்தப்பிய இரண்டாம் சங்க நூலென்றும் கருதப்படுகிறது. மூன்றாம் சங்க இலக்கியமும்கூட முழுவதுமாகக் கிடைக்கவில்லை என்பது மிக வருந்தத்தக்கது. அந்த விலைமதிக்க முடியாத இலக்கியங்கள் எல்லாம் பாதுகாக்கப்படாமல் அழிந்தொழிந்தும், பாதுகாக்கப்பட்டவை பின்னர் அவைகளைப் பற்றிய அறிவே இல்லாமல் ஆறுகளில் வீசப்பட்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டும் அழிக்கப்பட்டன என்பதும் நம்பக்கூட முடியவில்லை அல்லவா?
சங்ககாலத்திற்குப் பிறகு தமிழ் நாட்டில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளால் தமிழ் நிலப்பரப்பு அயலார் ஆளுகைக்கு உட்பட்டது. பிற மொழி, கலாச்சார, சமூக ஆக்கிரமிப்புகளால் தமிழும் அதன் இலக்கியமும் வெகுவாக புறக்கணிக்கப்பட்டன. ஆயினும் நூல்கள் இயற்றப்பட்டுக் கொண்டுதானிருந்தன. கலாச்சாரமும், சமூக வாழ்வியல்களும் திரிந்து போயின. பிற்காலத்தில் தமிழராட்சி மறுபடியும் தழைத்தோங்கிய போதிலும், தமிழ் மன்னர்களே பிற சமயக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் போற்றிப் பாதுகாக்கத்தொடங்கினர். தமது பெயரிலும்கூட வடமொழிப்பெயர்களைச் சேர்த்துக்கொண்டனர். கடவுள் வழிபாடு சங்ககாலத்தில் இருந்ததென்றாலும், தமிழின் தனித்த சிந்தனை மரபே இலக்கியத்திலும் பழக்க வழக்கங்களிலும் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டன. இடைக்காலப் பாண்டியர் காலத்தில் இந்நிலை மாறிச் சமயச் சிந்தனைகளும் பக்தி இலக்கியமுமே பெரும்பான்மை இலக்கியமாயின. இதற்கும் அடுத்த நிலையில் அந்நியர் படையெடுப்புகளினாலும், ஆட்சியினாலும் தமிழும் தமிழரின் அடையாளங்களும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டன. தமிழ்ச் சங்கம் மறுபடியும் நிறுவப்படாமலே போயிற்று. மூன்றாம் சங்கம் கடைச்சங்கமாகியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து தமிழறிஞர்கள் சிலர் செம்மொழி இலக்கியங்களை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு, தப்பிப் பிழைத்த, அவர்களுக்குக் கிடைத்த சங்க இலக்கிய நூல்களையும், பிற்கால நூல்களையும் பதிப்பிக்கத்தொடங்கினர். இவர்களில் இலங்கையைச்சேர்ந்த ஆறுமுக நாவலர், மற்றும் சீ வை தாமோதரம்பிள்ளை இருவரும் முதன்மையானவர்கள். பின்னர் தமிழ் நாட்டின் உ வே சாமிநாத ஐயர் அவர்கள் பத்துப்பாட்டு, மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணியின் கிடைத்த பகுதிகள் முதலியவைகளையும், பிற்கால சமய நூல்களையும் பதிப்பித்தார். வையாபுரிப் பிள்ளையவர்களும் சில சங்க நூல்களையும் பிற்காலச் சமய நூல்கள் சிலவற்றையும் பதிப்பித்தார். இவர்கள் தமிழகமெங்கும் பனையோலையில் பதித்திருந்த நூல்களை தேடித் தேடி அலைந்து, மூலை முடுக்குகளிலிருந்து மீட்டெடுத்து, புதுப்புனலுக்கும், போகி நெருப்புக்கும் இரையாகவிருந்த நூற்களைக் கவர்ந்து அவற்றை அரும்பாடுபட்டு ஒழுங்குபடுத்திப் பதிப்பித்தனர். இவர்களின் அர்ப்பணிப்பினாலும் அரும்பெரும் முயற்சியாலுமே இந்நூல்கள் நமக்குக் கிடத்துள்ளன. கிடைக்காமல் போனவை ஏராளம்.
சங்கம் என்பது புலவர்கள் கூடித் தமிழாராய்ச்சி செய்த, தமிழை வளர்த்த கழகம். பாண்டியர்கள் சங்கம் அமைத்துத் தமிழ் இலக்கியம் படைத்தனர் என்பதை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரை எழுதிய இறையனார் களவியல் உரை நூல் சொல்கிறது. தலைச்சங்கம் அன்றைய பாண்டியத் தலைநகரமாம் தென்மதுரையில் கூடியதாகவும். காய்ச்சினவழுதி முதல் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்களும், சிவபெருமான், முருகக்கடவுள், அகத்தியர், குபேரன், முரஞ்சியூர் முடிநாகனார் முதலாய 549 புலவர்களும் அதில் அமர்ந்தனரென்றும், முதுநாரை, முதுகுறுகு, களரியாவிரை, பரிபாடல்கள் முதலியன தலைச்சங்க நூல்களென்றும், அகத்தியம் இச்சங்கத்தின் இலக்கண நூலென்றும், இச்சங்கம் 4449 ஆண்டுகள் நீடித்ததென்றும் குறிப்பிடுகின்றது. தென்மதுரையும் தலைச்சங்க நூல்களும் கடலுள் தொலைந்தபின் இரண்டாவது சங்கம் பாண்டிய நாட்டின் அடுத்த தலைநகரான கபாடபுரத்தில் அமைக்கப்பட்டதாகவும், வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமன் வரையிலான 59 மன்னர்களும், தொல்காப்பியர், திரையன் மாறனார், மோசியார், வெள்ளூர்க் காப்பியனார், கீரந்தையார், துவரைக்கோன் முதலான புலவர்களும் சங்கத்தில் அமர்ந்திருந்தனர் என்றும், இச்சங்கம் 3700 ஆண்டுகள் நிலைத்திருந்தது என்றும், கலியும் குருகும் வெண்டாளியும், வியாழமாலை அகவலும் இடைச்சங்க நூல்களென்றம், அகத்தியமும் தொல்காப்பியமும் இவ்விலக்கியத்தின் இலக்கண நூல்களென்றும், கபாடபுரத்தையும், இச்சங்க நூல்களையும்கூட கடல் கொண்டதென்றும் கூறுகின்றது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாடு மீண்டும் உறுப்பெற்றதென்றும், மூன்றாம் சங்கம் மதுரையில் தொடங்கப் பெற்றதென்றும் அவ்வுரை சொல்கின்றது. இச்சங்கத்தின் புரவலர்கள் 49 மன்னர்கள். நக்கீரனார், இளந்திருமாறனார், நல்லந்துவனார், பெருங்குன்றக்கிழார், கபிலர், பரணர் போன்ற புலவர்கள் அமர்ந்திருந்தனர். கடைசங்க இலக்கியத்தில் 42 பெண்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டிருப்பது இதன் தலையாய சிறப்பு.
கடைச் சங்க இலக்கியத்திலிருந்து நமக்குக் கிடைதிருக்கின்ற நூல்கள் அகம், புறம் எனும் இரு பிரிவுகளில் அடங்குகிறன. அகப்பாடல்கள் காதலின் எல்லா நிலைகளையும் பற்றியதாகும் – அகநாநூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற தொகுப்புகள் அக நூல்களாகும். புறப்பாடல்கள் புறவாழ்வின் எல்லா கூறுகளையும்பற்றிக் கூறுவன. அவை தமிழ்ச் சிந்தனை மரபினையடுத்த புறவாழ்வியலான அறம்-பொருள்-இன்பம், அறிவியல் அடிப்படையிலான தத்துவம், போர், வீரம், புகழ், கொடை, நீதி, மன்னர்களின் சிறப்பு போன்றவற்றைப் பேசுகின்றன – புறநாநூறு, மதுரைக்காஞ்சி, நாலடியார், திருக்குறள், பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி போன்ற நூல்கள் புற நூல்களாகும். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் மன்னர்களைப் பற்றிய பாடல்களில் போற்றப்படும் மன்னர்கள் சோழ சேர அரசர்களாகவும் இருந்தனர். எட்டுதொகை நூலான பதிற்றுப்பத்து முழுவதும் சேர அரசர்களின் புகழ்பாடும் நூலாகும். சங்கம் தமிழகம் முழுவதும் விரவியிருந்த புலவர்களை போற்றிப் பாதுகாத்தது என்பதும் இலக்கியத்திற்கு எல்லைக்கோடுகள் இல்லையென்று அச்சங்கம் கருதியது என்பதும் இதிலிருந்து வெளிப்படுகிறது.
அக நூல்களுக்கு ஏழு திணைகளையும் (தமிழ் நிலத்திற்குறிய 5 திணைகள் தவிர கைக்கிளை, பெருந்திணை என்று 7 திணைகள்), புறத்திற்கு ஏழு திணைகளையும் தொல்காப்பியம் வகுத்திருந்தது. தொல்காப்பியம் இவற்றுக்கு முந்தைய இலக்கியத்தின் இலக்கணமாதலின், மூன்றாம் சங்கப் புறப்பாடல்களில் 11 திணை வகைகள் இருக்கின்றன (வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பெருந்திணை, பொதுவியல்).
இறையனார் களவியலுரையில் சொல்லப்பட்டிருக்கும் சங்கங்கள் பற்றிய செய்திகள், அதுவும் முதலிரண்டு சங்கங்களைப்பற்றிய செய்திகள், செவிவழிவந்த செய்தித் திரட்டாக மிகைப்படுத்திக் கூறப்பட்டவையாக இருக்கலாம். ஆயினும் கடைச்சங்கத்திற்கு முன்பாக 2 சங்கங்கள் இருந்தனவென்பதன் சான்றாகவே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் (சான்றுகள்) மிகப்பல சங்க நூல்களிலேயே காணக்கிடைக்கின்றன.
“தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவிந் நெடியோன்”
என்று மதுரைக் காஞ்சியிலும்,
“தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை”
என்று சிறுபாணாற்றுப்படையிலும்.
“தமிழ்கெழுகூடல் தண்கோல் வேந்தே”
என்று புறநானூற்றிலும் உள்ள குறிப்புகள் ஒரு தமிழ் மன்றத்தில் மன்னர்களின் அவையில் புலவர்கள் கூடிஅமர்ந்து தமிழ் வளர்த்ததன் சான்றுகளே. “மதுராபுரிச் சங்கம் வைத்தும்…” எனும் சின்னமனூர் செப்பேடு “சங்கம்” எனும் சொல்லையே பயன்படுத்துகின்றது. பிற்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் பலவும் மதுரைச் “சங்கம்” பற்றி குறிப்பிடுகின்றன.
நமக்குக்கிடைத்துள்ள மூன்றாம் சங்க நூல்கள் எவை என்று தெரியவேண்டுமல்லவா? மூன்று பிரிவுகள் கொண்ட அவை:
எட்டுதொகை நூல்கள் (தொகுக்கப்பட்டவை): நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநாநூறு, புறநாநூறு.
குறுந்தொகை முதலிலும், பின் நற்றிணையும் அகநானூறும் தொகுக்கப்பட்டன. அதன்பின் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகியவை தொகுக்கப்பட்டன. கலித்தொகையும், பரிபாடலும் காலத்தால் சிறிது பின்பட்டு இறுதியில் தொகுக்கப்பட்டவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை ஐந்தும் அக நூல்கள். புறநானூறு, பதிற்றுப்பத்து இரண்டும் புற நூல்கள். பரிபாடல் அகமும் புறமும் கலந்த நூல். கலித்தொகை கலிபாவாலும் பரிபாடல் பரிபாடலாலும் ஆனவை. மற்றவை ஆசிரியப்பாவால் ஆனவை.
பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.
பத்துப்பாட்டின் ஆசிரியர்கள் எட்டு புலவர்கள். திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை இவற்றை இயற்றியவர் நக்கீரனார். பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை இவற்றை இயற்றியவர் உருத்திரங்கண்ணனார். பிற ஆறுபாடல்களை ஆறு புலவர்கள் பாடியுள்ளனர். பொருநராற்றுப்படை பாடியவர் முடத்தாமக் கண்ணியார் எனும் பெண் புலவர். சிறுபாணாற்றுப்படை – இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்; மலைபடுகடாம் – இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்; முல்லைப்பாட்டு – நப்பூதனார்; குறிஞ்சிப்பாட்டு – கபிலர்; மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்.
பாட்டு எனும் இலக்கியத்திற்கு பத்துப்பாட்டினையே முன்மாதிரியாகக் கொண்டு இலக்கணம் வகுப்பர் இலக்கண நூலாசிரியர்கள். பா வகையினால் பாட்டிற்குச் சிறப்பா அன்றி பாடப்பட்ட முறையினால் பா வகைக்குச் சிறப்பா என்று பிரித்தறிய முடியாத நிலையில் பிற்காலத்தில் இலக்கணம் வகுத்தோர் பத்துப்பாட்டையே முன்மாதிரியாகக் கொண்டு இலக்கணம் வகுத்து விட்டனர் என்பார் முனைவர் இரா தண்டாயுதம். முல்லைப்பாட்டும், குறிஞ்சிப்பாட்டும் அகம் தழுவியவை. பட்டினப்பாலையும், நெடுநல்வாடையும் அகமும் புறமும் தழுவியவை. ஏனைய நூல்கள் புற நூல்களாம்.
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் (இவை சங்கம் மருவியகால நூல்களாகக் கருதப்படும். ஆயினும் சங்கத்தில் வழிவந்தவையே இவை என்பதில் சிறிதும் ஐயமில்லை): திருக்குறள், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நாநூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, நாலடியார்.
தொன்மை இலக்கிய நூல்களில் மிக அதிகமாக மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல் நம் திருக்குறளாகும். ஏறக்குறைய உலகின் எல்லா மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னர்களும், நாடும், மக்களும் தமிழரின் தமிழின் மிக நெருக்கமான பிரதிநிதிகள் எனச் சொல்லலாம். அவர்களின் இலக்கிய நாட்டம் உலகின் மிகப்பெரிய இலக்கியத் தொகுப்பினை நமக்குத் தந்திருக்கிறது. மறைந்து போனவை, தொலைந்து போனவை தவிர கையில் கிடைத்திருக்கும் பொக்கிஷங்களையாவது காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கும் நம் சந்ததியினருக்கும் வெகுவாக உண்டு. அதற்காகவாவது நம் இலக்கியத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். ஏனென்றால், இந்தத் தமிழ் இலக்கிய நூல்கள் நம் விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் என்பதை உணர்ந்து, அவை இப்பொழுது நம் கையில் கிடைத்திருப்பதற்கு சில அறிஞர்கள் பசி மறந்து தூக்கம் மறந்து நாட்களும் நேரமும் எல்லாவற்றையும் மறந்து, ஊர் ஊராக அலைந்து திரிந்து செல்லறித்தும், பொடிப்பொடியாக உதிர்ந்து கொண்டிருந்த சுவடிகளை அழிவின் வாயிலிலிருந்து காப்பாற்றி அவற்றை வகைப்படுத்தி, எழுத்துப் பிழை திருத்தி அச்சிட்ட புண்ணியவான்கள். அவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். ஆறுமுக நாவலர் மற்றும் சி வை தாமோதரம் பிள்ளை அவர்கள். திரு தாமோதரம் பிள்ளை இப்பணிக்காக இந்தியாவற்கே குடிபுகுந்துவிட்டர். சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் batch மாணவர். திரு உ வே சுவாமிநாதன் அவர்களும், திரு வையாபுரிப் பிள்ளை அவர்களும் மற்ற இருவர் ஆவர். இவர்களின் பிரம்மப் பிரயத்தனம் இன்றி நம் கையில் ஒரு சங்கநூல் கூடக் கிடைத்திருக்காது.
சில ஆங்கிலேய அதிகாரிகளும் தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றி இருக்கின்றனர். இவர்களுள் என்றென்றும் மறக்க முடியாதவர் ஒருவர் திரு Francis Whyte Ellis. 1798ல் கிழக்கு இந்திய கம்பனியில் writer ஆகச் சேர்ந்து 1802ல் Secretary, Board of Revenue நிலைக்கு உயர்ந்தவர். தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகள் அனைத்தையும் கற்று இவைகள் திராவிட மொழிக்குடும்பம் என்றும் இம்மொழிகளின் மூலம் ஸமஸ்கிருதம் அல்ல, தமிழ் என்று முதலில் நிரூபித்தவர் இவர்தான். Caldwell அல்ல. திருக்குறளை மிகவும் நேசித்தவர். அதன் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஒரு Hindu Law scholar. 1819 ஆம் ஆண்டு இளவயதில் ராமனாதபுரத்தில் உயிரிழந்தார். College of Fort St George இவர் தொடங்கியதுதான். இவர் பதிப்பிக்காமல் விட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் கை மாறி கை மாறி மதுரை கலெக்டர் வீட்டில் அவரது சமையல்காரன் அடுப்பெரிப்பதற்குப் பயன்படுத்தி, மிஞ்சியது பறிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அவர் வைத்திருந்த ஓலையில் இருந்தது திருக்குறளும் கூட. 1812ல் இந்த ஓலையில் இருந்த திருக்குறள் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. சென்னையிலுள்ளா ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அந்தப் பதிப்பினை அண்மையில் மீள்பதிப்பு செய்துள்ளது.